- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- 273. உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
- 274. பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.