- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
- புகலரும் பெரியஓர் நிலையில்
- இன்புரு வாகி அருளொடும் விளங்கி
- இயற்றலே ஆதிஐந் தொழிலும்
- தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
- தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
- அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
- மன்னுருத் திரர்களே முதலா
- ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
- குறுபெருந் தொழில்பல இயற்றி
- இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
- இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
- அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
- கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
- குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
- கொள்கையாய்க் கொள்கையோ டளவா
- அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
- அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
- மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
- வண்மையைத் தடுப்பவர் யாரே.