- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
- உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
- மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
- நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
- வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
- வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
- இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
- இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
- எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
- நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
- ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
- நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
- பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
- பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
- கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- கோவேஎன் கணவாஎன் குரவாஎன்281 குணவா
- நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
- நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
- சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
- தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
- எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
- அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
- கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
- பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
- வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
- பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
- எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
- சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
- சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
- மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
- அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
- துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
- தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
- மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
- மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
- இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
- தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
- விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
- துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
- நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
- என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
- உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
- தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
- தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
- தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
- சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
- ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
- தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
- பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
- பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
- இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
- இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
- கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
- கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
- நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
- தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
- தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
- ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
- எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
- தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
- இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
- தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
- தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
- எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
- இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
- முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
- முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
- ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
- பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
- பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
- நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
- நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
- அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
- நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
- புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
- பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
- தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
- தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
- இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
- மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
- மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
- எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
- மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
- அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
- அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
- இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
- ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
- துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- 281. எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 282. தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
- 283. முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க. மடிமேல் - பி. இரா., ஆ. பா.
- 284. மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.