- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
- கண்டுகொள் கணவனே என்றாள்
- ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
- உவந்திலேன் உண்மையீ தென்றாள்
- பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
- பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
- மாதய வுடைய வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
- மறப்பனோ கனவினும் என்றாள்
- உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
- உயிர்தரி யாதெனக் கென்றாள்
- கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
- கடலமு தளித்தருள் என்றாள்
- வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
- தருகநற் றருணம்ஈ தென்றாள்
- கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
- குறையுமோ குறைந்திடா தென்றாள்
- நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
- ஞாயமோ நண்பனே என்றாள்
- வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
- ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
- நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
- நம்பினேன் நயந்தருள் என்றாள்
- குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
- குழியிலே இருந்திடேன் என்றாள்
- மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.