- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
- புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
- கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
- கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
- நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
- நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
- வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
- தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
- எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
- இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
- ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
- ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
- சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- 285. அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் பொருள்கொள்க - முதற்பதிப்பு.இருள் - நஞ்சு.