- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
- எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
- களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
- செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
- சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
- கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
- எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
- இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
- வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
- பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
- பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
- கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
- எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
- நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
- பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
- பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
- தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
- இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
- பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
- கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
- கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
- மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
- எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
- குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
- மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.