- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
- விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
- கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
- பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
- ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
- வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
- வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
- அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
- அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
- முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
- படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
- தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
- சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
- தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
- வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
- பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
- திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
- உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
- கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
- குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
- நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
- பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
- துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
- மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
- தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
- நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
- துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
- சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
- நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
- இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
- திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
- கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
- அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
- விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
- மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
- பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
- நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
- மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
- கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
- பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.