- கலித்தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே
- தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
- தொடங்குநாள் நல்லதன் றோ.
- வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
- நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
- நல்லநாள் எண்ணிய நாள்.
- காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
- தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
- தடையாதும் இல்லைகண் டாய்.
- கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
- பையுள்292 உனக்கென்னை யோ - நெஞ்சே
- பையுள் உனக்கென்னை யோ.
- என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
- உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
- உன்னுவ தென்னைகண் டாய்.
- நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
- ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
- ஏன்பற்று வாயென்ப தார்.
- தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
- தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
- தத்துவ முன்னுவ தேன்.
- ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
- விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
- விக்கல் வராதுகண் டாய்.
- 291. காணவே - பி. இரா., பதிப்பு.