- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
- கண்ணிகள்
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
- என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
- கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
- குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
- நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
- நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
- சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
- கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
- கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
- சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
- சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
- என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
- அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
- பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
- பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
- கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
- கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
- எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
- கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
- உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
- உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
- தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
- எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
- என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
- என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
- என்னுடையஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
- என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
- எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
- என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.