- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- பல்லவி எடுப்பு
- திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
- சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
- கண்ணிகள்
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- 313. உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.