- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
- நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
- அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
- நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.