- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
- என்றும் தீரா வழக்குக் காண டி.
- பல்லவி எடுப்பு
- எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
- இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
- கண்ணிகள்
- அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
- யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
- இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
- இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
- சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
- என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
- இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
- இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
- என்றும் தீரா வழக்குக் காண டி.