- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- இதுநல்ல தருணம் - அருள்செய்ய
- இதுநல்ல தருணம்.
- பல்லவி எடுப்பு
- பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
- பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
- கண்ணிகள்
- மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
- வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
- கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
- கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
- குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
- குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
- வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
- விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
- கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
- கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
- தாபமும் சோபமும் தான்தானே சென்றது
- தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
- கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
- கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
- புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
- பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
- இதுநல்ல தருணம் - அருள்செய்ய
- இதுநல்ல தருணம்.
- 314. கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.