- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
- ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
- கண்ணிகள்
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
- விளைவு பலபல வேறென்று காட்டிச்
- சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
- சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
- செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
- சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
- செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
- அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
- தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
- விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
- செய்யென்று தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- என்பால் வருபவர்க் கின்றே - அருள்
- ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
- தென்பால் இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
- துரியப் பதியில் அதுஅத னாலே
- தெரியத் தெரிவது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
- பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
- திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தற்பர மேவடி வாகி - அது
- தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
- சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நவவெளி நால்வகை யாதி - ஒரு
- நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
- சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மேருவெற் புச்சியின் பாலே - நின்று
- விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
- சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆரண வீதிக் கடையும் - சுத்த
- ஆகம வீதிகள் அந்தக் கடையும்
- சேர நடுக்கடை பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாடல் மறைகளோர் கோடி - அருட்
- பாத உருவ சொரூபங்கள் பாடி
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நீடு சிவாகமங் கோடி - அருள்
- நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
- பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
- தித்தித் திருப்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
- பிரம வெளியினில் பேரரு ளாலே
- சித்தாடு கின்றது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
- எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
- செம்பொருள் என்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சைவ முதலாக நாட்டும் - பல
- சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
- தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
- எல்லா உலகும் இயம்புதல் சும்மா
- செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
- பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
- சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வருவித்த வண்ணமும் நானே - இந்த
- மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
- தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாரிடம் வானிட மற்றும் - இடம்
- பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
- சேரிட மாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
- உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
- செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
- உளமும் எனக்கே உதவிய தன்றித்
- திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
- எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
- திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
- பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
- சீருறச் செய்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
- ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
- 317. ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.