- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.