- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
- கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
- அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
- அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
- வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
- வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
- தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
- தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- 318. நிலையின் - பி. இரா. பதிப்பு.
- 319. வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.