- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.