- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
- மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
- தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
- சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
- ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
- அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
- ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
- புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
- சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
- தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
- தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
- என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
- என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
- விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
- விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
- நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
- நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
- எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
- சேர்கதி பலபல செப்புகின் றாரும்
- பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
- பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
- மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
- மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
- எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- 325. உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு.
- 326. சமுகம் - ச. மு. க. பதிப்பு.