- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
- பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
- நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
- நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
- கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
- கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
- துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
- அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
- முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
- முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
- சகவடிவில் தானாகி நானாகி நானும்
- தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
- சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
- பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
- தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
- சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
- மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
- வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
- துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- 328. தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.