- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
- பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
- தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
- தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
- உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
- கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
- திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
- உயர்வுறுபே ரருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
- மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
- செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
- கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
- சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
- தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
- புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
- சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
- சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
- வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
- எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
- செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
- மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
- பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
- தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
- தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
- நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
- சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
- சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
- கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
- செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
- அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
- மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
- திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.