- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
- இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
- தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
- வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
- விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
- பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
- உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
- கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.
- காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை
- ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து
- நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்
- கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.
- கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
- ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
- நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
- ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
- காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
- மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
- பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
- வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
- கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
- தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
- ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
- தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
- வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
- தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.