- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
- வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
- உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
- உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
- வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
- மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
- இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
- இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
- இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
- இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
- பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
- பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
- சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
- சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
- பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
- தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
- தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
- செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
- தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
- அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
- அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
- கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
- கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
- தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
- தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
- சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
- சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
- தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.