- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
- எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
- நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
- நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
- முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
- மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
- பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
- பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
- என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
- எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
- தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
- சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
- மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
- வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
- உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
- உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.