- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
- இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
- கண்ணிகள்
- தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
- தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
- கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
- கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
- எனக்கும் உனக்கும்
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
- மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
- ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
- எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
- எனக்கும் உனக்கும்
- என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
- எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
- சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
- சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
- அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
- எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
- எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- தனிஎன்338 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
- தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
- வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
- மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
- உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
- என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
- எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
- ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
- சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
- சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
- எனக்கும் உனக்கும்
- யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
- யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ
- ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
- உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ.
- எனக்கும் உனக்கும்
- தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
- தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
- புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
- புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
- எனக்கும் உனக்கும்
- தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
- தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
- நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
- நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
- எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
- நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
- நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
- விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
- அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
- அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
- இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
- அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
- அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
- காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
- ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
- எனக்கும் உனக்கும்
- அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
- அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
- பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
- பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
- இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
- தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
- சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
- எனக்கும் உனக்கும்
- கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
- கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
- தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
- தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
- எனக்கும் உனக்கும்
- என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
- என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
- பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
- புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
- எனக்கும் உனக்கும்
- என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
- என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
- புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
- பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
- ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
- பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
- பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
- வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
- எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
- எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
- எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
- மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
- வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
- உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
- தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
- சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
- மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
- உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
- உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
- எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
- சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
- தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ
- எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
- முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
- மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
- துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
- ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
- ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
- என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
- அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
- அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
- எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
- துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
- தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
- உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
- மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
- மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
- சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
- அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
- அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
- ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
- இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
- ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
- இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
- முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
- முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
- எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
- குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
- கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே
- நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
- புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
- கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
- சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
- சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
- ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
- மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
- மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே
- உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
- என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
- யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
- கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
- விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
- விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
- பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
- பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
- அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
- படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
- பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
- அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
- தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
- தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
- கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
- உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
- உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
- துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
- துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
- பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
- நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ
- நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
- ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
- தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
- செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
- எனக்கும் உனக்கும்
- இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
- எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
- கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
- களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
- எனக்கும் உனக்கும்
- சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
- தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
- முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
- முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
- எனக்கும் உனக்கும்
- நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே
- நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே
- ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே
- உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.
- எனக்கும் உனக்கும்
- பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
- பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
- என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
- எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
- எனக்கும் உனக்கும்
- மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
- மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
- அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
- அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
- எனக்கும் உனக்கும்
- வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
- மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
- ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
- எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
- இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
- பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
- புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
- சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
- குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
- கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
- துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
- சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
- சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே
- அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே
- நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே
- நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
- நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
- தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
- தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
- துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
- சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
- துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
- இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
- 336. உயிரும் உடலும் - ச. மு. க.
- 337. பெருகி - ச. மு. க.
- 338. தனியன் - பி. இரா., ச. மு. க.