- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
- சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
- சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
- சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.
- நனந்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
- தினங்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
- நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
- நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
- அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
- அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.
- உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
- அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
- ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
- ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
- சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
- ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
- சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
- மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
- அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
- நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
- பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
- திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.
- அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
- எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
- என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
- சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
- நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
- தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
- பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
- அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
- அரஅர அரஅர அரஅர அரஅர.
- நவநிலை தருவது நவவடி வுறுவது
- நவவெளி நடுவது நவநவ நவமது
- சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
- சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
- சந்திர தரசிர சுந்தர சுரவர
- தந்திர நவபத மந்திர புரநட
- சங்கர சிவசிவ சங்கர சிவசிவ
- சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.
- வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
- வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
- ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண
- நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.
- பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ
- பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
- நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி
- நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர.
- பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு
- பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
- சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர
- சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.
- கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
- கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
- சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
- சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
- எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
- இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
- தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
- சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.