- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
- கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
- ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
- ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
- ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
- தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
- தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
- மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
- மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
- சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
- செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
- தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
- எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
- இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
- சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
- சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
- இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
- மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
- வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
- மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
- அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
- அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
- வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
- வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
- நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
- நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
- சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
- செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
- 345. இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.