- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
- பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே352 எனைஈன்ற
- ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
- நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
- பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
- வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
- தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
- கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
- நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
- பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
- நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
- கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
- மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
- சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
- காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
- கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
- பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
- தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
- கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
- மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
- வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
- கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
- குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
- புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
- நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
- வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
- குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
- அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
- எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
- கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
- பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
- தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
- கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- 352, 353. இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.