- கலிநிலைத் துறை
- திருச்சிற்றம்பலம்
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
- பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
- வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
- வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
- ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
- ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
- ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
- வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
- தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
- வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
- கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
- மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
- கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
- கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
- பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
- விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- 355. அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.