- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
- உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
- மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
- வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
- இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
- எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
- நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
- களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
- சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
- செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
- தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
- திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
- மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
- வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
- வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
- வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
- மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
- வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
- மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
- மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
- செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
- சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- 356. பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு.
- 357. எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 358. முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்' என்பது ஒன்பதாம்பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது எட்டாம் பாடலாகவும் உள்ளன.