- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- கல்லால் அடியார் கல்லடி உண்டார்
- கண்டார் உலகங் களைவேதம்
- செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- எல்லாம் உடையார் தணிகா சலனார்
- என்நா யகனார் இயல்வேலார்
- நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
- நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- கண்ணார் நுதலார் விடமார் களனார்
- கரமார் மழுவார் களைகண்ணார்
- பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
- பெரியார் கைலைப் பெருமானார்
- தண்ணார் சடையார் தருமா மகனார்
- தணிகா சலனார் தனிவேலார்
- எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
- என்செய் கேனோ இடர்கொண்டே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.