- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
- இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
- மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
- காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
- காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
- தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
- தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
- கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
- கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
- தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
- ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
- நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
- நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
- மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
- வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
- சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
- ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
- அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
- ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
- கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
- ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
- ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
- பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
- புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
- பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
- மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
- மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
- அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
- அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்
- புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
- கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
- றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
- விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
- வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
- சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.
- ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
- எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
- தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
- துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
- ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
- அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
- சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
- விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
- வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
- மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
- தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
- கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
- மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
- மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
- பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
- பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
- ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
- எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
- பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
- பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
- எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
- எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
- விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
- விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
- மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
- நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
- நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
- பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
- பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
- கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
- காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
- துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
- ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
- அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
- ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
- இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
- ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
- உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
- பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
- வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
- வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
- தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
- சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
- திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
- பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
- விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
- விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
- உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
- ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
- தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
- தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- 360. பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.
- 361. மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.
- 362. இந்தவெளி - பி. இரா. பதிப்பு.
- 363. திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு.
- 364. திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.