- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
- தவம்எது புரிந்ததோ என்றாள்
- அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
- அதிசயம் அதிசயம் என்றாள்
- இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
- எனக்கிணை யார்கொலோ என்றாள்
- சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
- ததும்பினாள் நான்பெற்ற தனியே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
- கண்டனன் கண்டனன் என்றாள்
- அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
- அன்பிலே கலந்தனன் என்றாள்
- தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
- செயல்செயத் தந்தனன் என்றாள்
- தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
- தவத்தினால் பெற்றநம் தனியே.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
- என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
- பாலும்இன் சுவையும் போன்றென தாவி
- பற்றினன் கலந்தனன் என்றாள்
- சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
- சத்தியை அளித்தனன் என்றாள்
- மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
- மிகுகளிப் புற்றனள் வியந்தே.