- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
- வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
- விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
- மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
- அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
- உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
- உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
- மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
- மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
- இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
- இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
- என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
- சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
- சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
- தேற்றமிகு தண்ரைச் சீவர்கள்பற் பலரைச்
- செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
- ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
- உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
- றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
- துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
- சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
- விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
- மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
- வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
- மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.