- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.