- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
- எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
- எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
- பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
- பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
- விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
- விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
- கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
- எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
- என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
- உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
- உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
- அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
- அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
- கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
- எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
- பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
- பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
- இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
- எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
- சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
- வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
- மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
- சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
- துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
- ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
- கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
- தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
- இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
- இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
- மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
- மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
- தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
- தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
- மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
- நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
- நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
- இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
- எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
- இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
- என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
- என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
- பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
- புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
- அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
- அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
- மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
- மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
- இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
- நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
- நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
- என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
- செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
- சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
- கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
- பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
- படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
- அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
- என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
- எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
- ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
- என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
- ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
- அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
- கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
- கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
- கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
- ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
- அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
- தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
- தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
- தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
- திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
- இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
- அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
- ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
- இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
- இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
- தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
- தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
- தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
- துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
- ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
- ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
- என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
- ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
- கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
- வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
- விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
- சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
- ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
- இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
- கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
- கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
- துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
- சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
- உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
- உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
- என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
- எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
- தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
- தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
- பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
- பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
- மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
- மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
- நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
- நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
- வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
- வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
- தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
- திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
- தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
- சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
- இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
- எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
- எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
- எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
- கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
- கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
- செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
- சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
- நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
- நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
- நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
- ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
- கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
- பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
- பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
- தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
- துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
- அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
- அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
- கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
- குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
- எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
- இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
- உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
- துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
- சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
- பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
- பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
- அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
- ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
- தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
- கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
- கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
- செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
- சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
- இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
- இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.