- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
- ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
- மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
- விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
- துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
- சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
- வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
- மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
- 374. இத்திருப்பாட்டின் கீழ் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகளால்எழுதப்பெற்றுள்ளது.
- 375. இத்திருப்பாட்டின் கீழ் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்"என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.