- கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
- ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
- நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
- நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
- நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
- அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
- கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
- மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
- நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
- மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
- ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
- செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
- எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
- அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
- இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.
- தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
- பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
- கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
- கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.
- மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
- நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
- பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
- நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.