- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.