- கலிநிலை வண்ணத்துறை
- திருச்சிற்றம்பலம்
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- மந்தா ரம்சேர் பைம்பொழி லின்கண் மயிலேறி
- வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளைகாணேன்
- சந்தா ரம்சூழ் தண்கிளர் சாரல் தணிகேசர்
- தந்தார் என்பால் தந்தார் என்னைத் தந்தாரே.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- சந்தார் வரையுள் சிந்தா மணிநேர் தணிகேசர்
- மந்தா நிலம்மே வுந்தார் மறுகில் மயிலேறி
- வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக்
- கொந்தார் குழல்என் நிலையுங் கலையுங் கொண்டாரே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
- தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
- வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
- தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
- காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
- தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
- ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
- ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ
- அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம்
- தன்னை அளிக்குந் தண்டணி கேசர் தம்பாற்போய்
- என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே.
- வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
- மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
- திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
- நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
- மன்றேர் தணிகையி னின்றீர் கதிதர வந்தீரோ
- என்றே னசைதரு மின்றேன் மொழியாய் யானுன்பால்
- இன்றே சுரருல கெய்திட வந்தே னென்றார்காண்
- குன்றேர் முலையா யென்னடி யவர்சொற் குறிதானே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- 14.காந்தளோர்,நீலமோர். திகழ்வென்பால்.தொ.வே.முதற்பதிப்பு