- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
- அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
- செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
- வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
- அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
- கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
- திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
- குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.