- திருச்சிற்றம்பலம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
- பன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி
- மின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி
- நின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.
- கலிநிலைத்துறை
- மதிவளர் சடைமுடி மணிதரு சுரர்முடி மணிஎன்கோ
- பதிவளர் சரவண பவநவ சிவகுரு பதிஎன்கோ
- துதிவளர் துணைஅடி தொழும்அடி யவர்பெறு துணைஎன்கோ
- நிதிவளர் பரசுக நிலைபெறும் நெறிதரு நினையானே.
- கட்டளைக் கலித்துறை
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- வெண்பா
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
- அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும்-முக்கண்
- குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்
- பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- கலிவிருத்தம்
- சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
- பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்
- முத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்
- புத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- கட்டளைக் கலித்துறை
- ஆறுமு கங்கொண்ட ஐயாஎன் துன்பம் அனைத்தும்இன்னும்
- ஏறுமு கங்கொண்ட தல்லால் இறங்குமு கம்இலையால்
- வீறுமு கங்கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்
- சீறுமு கங்கொண்ட அத்துன்பம் ஓடச் செலுத்துகவே.
- பண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு
- கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்
- திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு
- மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- வண்ண விருத்தம்
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- கொச்சகக் கலிப்பா
- கூழுக் கழுவேனோ கோத்தணிகைக் கோவேஎன்
- ஊழுக் கழுவேனோ ஓயாத் துயர்ப்பிறவி
- ஏழுக் கழுவேனோ என்செய்கேன் என்செய்கேன்
- பாழுக் கிறைத்தேன்ஈ துன்செயலோ பார்க்கும்இடம்
- சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
- தெரிதற் கென்னும் திருத்தணி கேசனே
- உந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த
- உலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள
- மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
- முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
- கந்தைக் கும்வழி இல்லை அரகர
- கஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கறிபிடித்த ஊன்கடையில் கண்டவர்தம் கால்பிடித்துக் கவ்வும் பொல்லா
- வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தைபயிற் றிடலாகும் வேண்டி வேண்டி
- மறிபிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனமறுகி வருந்தத் தங்கள்
- குறிபிடித்துக் காட்டுவோர்க் கியாவர்படிப் பிக்கவலார் குமர வேளே.
- நேரிசை வெண்பா
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதுமியாம்
- ஓதா தவமே யுழனெஞ்சே-மீதாத்
- ததிதி யெனமயிலிற் றானாடி நாளுந்
- திதிதி தருந்தணிகைத் தே.
- ஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
- தாரிரண்டார் போனின்ற தையன்மீர்-வாரிரண்டாத்
- தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
- மைய லழிக்கு மருந்து.
- ஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்
- ஆலுந் தொழிற்கேவ லாகுமோ-மாலுந்தி
- மாற்றுந் தணிகையர்க்கு மாமயின்மேல் நாடோறுந்
- தோற்றுந் தணிகையன்பொற் றோள்.