- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
- பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
- கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
- கண்ர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
- எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
- என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
- அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
- நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட
- நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
- நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
- அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
- புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
- நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
- செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
- சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
- ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
- வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
- தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
- செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
- சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
- சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
- ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
- வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
- பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
- பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
- ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
- தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
- அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
- குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
- புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
- புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
- நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
- நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
- அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.