- திருவொற்றியூர்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
- மலரடி வழுத்திடச் சிறிதும்
- எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
- விடையில்வந் தருள்விழி விருந்தே
- கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
- காட்சியே ஒற்றியங் கரும்பே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
- வஞ்சனேன் நின்னடி யவர்பால்
- எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
- கோலநெஞ் சொளிர் குணக் குன்றே
- உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
- யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.
- தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
- தீயனேன் பேயனேன் சிறியேன்
- எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
- இடையிடர்ப் பசியசெம் பொன்னே
- செவ்வண மணியே திகழ்குணக் கடலே
- திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
- வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
- வஞ்சக மனத்தினேன் பொல்லா
- ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
- புனிதமே புதுமணப் பூவே
- பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
- பாதுகாத் தளிப்பதுன் பரமே.