- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
- சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
- வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
- என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
- உந்தி வந்தவ னோடரி ஏத்த
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
- கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
- வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
- இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
- ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
- தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
- வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
- அடிய னேன்அலை கின்றதும் அழகோ
- ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
- குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
- மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
- கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
- உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
- புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
- மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
- அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
- உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
- தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
- வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
- குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
- ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.