- திருவொற்றியூர்
- கலி விருத்தம்
- போகம் கொண்ட புணர்முலை மாதொரு
- பாகம் கொண்ட படம்பக்க நாதரே
- மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
- மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
- தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
- பவள மேனிப் படம்பக்க நாதரே
- கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
- இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
- பால மேவும் படம்பக்க நாதரே
- ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
- ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
- உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
- படைகொள் சூலப் படம்பக்க நாதரே
- கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
- இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
- பறைய நின்றப டம்பக்க நாதரே
- உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
- குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
- வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
- பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
- கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
- வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
- நாட நல்இசை நல்கிய மூவர்தம்
- பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
- வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
- ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
- சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
- பலவு மாகும்ப டம்பக்க நாதரே
- நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
- குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
- அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
- படிவ மாகும்ப டம்பக்க நாதரே
- நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
- மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
- மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
- பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
- விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
- துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.