- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- விடங்க லந்தருள் மிடறுடை யவனே
- வேதன் மால்புகழ் விடையுடை யவனே
- கடங்க லந்தமா உரியுடை யவனே
- கந்த னைத்தரும் கனிவுடை யவனே
- இடங்க லந்தபெண் கூறுடை யவனே
- எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
- திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.