- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
- மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
- ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
- தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
- ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
- மறலி வந்துனை வாஎன அழைக்கில்
- ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- போது வைகிய நான்முகன் மகவான்
- புணரி வைகிய பூமகள் கொழுநன்
- ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
- மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
- எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
- சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
- ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.