- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.