- திருவொற்றியூரும் திருத்தில்லையும்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
- சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
- கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
- கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
- செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
- தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
- நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- அட்ட மூர்த்தம தாகிய பொருளை
- அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
- விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
- வேத மூலத்தை வித்தக விளைவை
- எட்ட ரும்பர மானந்த நிறைவை
- எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
- நட்டம் ஆடிய நடனநா யகத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
- உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
- தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
- சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
- பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
- பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
- நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
- உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
- படையெ டுத்தவர் படைமறந் தாலும்
- பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
- புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
- பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
- நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
- மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
- புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
- பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
- தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
- சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
- நன்மை என்பன யாவையும் அளிக்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- இன்னும் பற்பல நாளிருந் தாலும்
- இக்க ணந்தனி லேஇறந் தாலும்
- துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
- சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
- என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
- எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
- நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.