- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
- ஈதல் இரக்கம் எள்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
- ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
- காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்பை அருமைசெய்து
- நிற்ப தலதுன் பொன் அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
- சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
- கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
- கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
- விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
- கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
- யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
- வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
- கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
- கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
- தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
- காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
- துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
- உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
- கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
- நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
- ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
- காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
- தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
- மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
- காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.